சிறு விளக்கில் ஏற்றப்படுகிற தீபம், ஊரையே வெளிச்சமாக்குவது போல, தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களின் வாழ்வைப் பிரகாசிக்கச் செய்துவருகிறார் கண்ணகி. திருச்சியைச் சேர்ந்த இவர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுமார் 47 ஆயிரம் பெண்களின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சி, அவர்களைத் தொழில்முனைவோராக்கியிருக்கிறார்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தனியார் வங்கியில் 21 ஆண்டுகள் பணியாற்றிய கண்ணகி, கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தனது வங்கிப் பணியைத் துறந்தார். 1998-ம் ஆண்டு பெண்களுக்கான Woman NGO என்னும் மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கினார். முதல் கட்டமாக 77 கிராமங்களில் 12 உறுப்பினர்களைக் கொண்ட 92 மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். அவர்களுக்கு வங்கிகளிடமிருந்து கடன் வசதி பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் உற்பத்தித் தொழிலுக்கான அனைத்து உதவிகளையும் செய்து, தோளோடு தோள் நின்று அவர்களின் தோழியாக மாறினார்.
தற்போது இவரது அமைப்பின் மூலம் கிட்டத்தட்ட ஆறாயிரம் குழுக்களை உருவாக்கி அவற்றைத் தொடர்ந்து செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறார்.
"பெண்கள் சுயமாகத் தொழில் செய்யும் வாய்ப்புகள் இன்று அதிகம். பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் துணிச்சலுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்" என்கிறார் கண்ணகி.
"நான் வங்கியில் வேலை செய்தபோது வங்கி நிர்வாகங்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினரை அலைக்கழிப்பதைப் பார்த்திருக்கிறேன். கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அந்தப் பெண்களுக்காக வங்கி நிர்வாகத்துடன் பேசி, அவர்களுக்குக் கடனுதவி பெற்றுத் தந்திருக்கிறேன். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள்" என்று சொல்லும் கண்ணகி, அதுதான் தன்னை மகளிர் சுய உதவிக் குழுக்களை நோக்கிப் பயணப்படவைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
"வங்கிக் கடன் பெறும் குழுக்களுக்கு நானே உத்தரவாதம் அளிக்கிறேன். என் சொத்தை விற்றுக் கடனை அடைத்த அனுபவமும் உண்டு" என்று சொல்லும் கண்ணகி, அதற்காகத் துவண்டுவிடவில்லை.
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அடிப்படை பயிற்சி, விழிப்புணர்வு முகாம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சியும் அளித்துவருவதால் எந்தத் தடங்கலும் இல்லாமல் பெண்கள் வெற்றிப் பாதையை எட்டிப்பிடிக்கின்றனர்.
"அரசாங்கப் பணியிலோ தனியார் நிறுவனங்களிலோ பணிபுரியும் பெண்களுக்கு அலுவலக நேரம், விடுமுறை நாட்கள், விடுப்புச் சலுகைகள் ஆகியவை உண்டு. ஆனால் சுயதொழில் செய்கிறவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை நேரம், விடுமுறை நாட்கள் போன்றவை அநேகமாக இருக்காது. எனவே ஒரு பக்கம் குடும்பத்தின் தேவைகளையும் மற்றொரு பக்கம் சுயதொழிலின் தேவைகளையும் உணர்ந்து பேலன்ஸ் செய்யப் பழகிக் கொள்ளவேண்டும்.
தங்களது வீட்டுக்கு அருகிலேயே தொழில்கூடத்தையோ, நிறுவனத்தையோ அமைத்துக் கொள்வதன் மூலம் வீடு, அலுவலகம் இரண்டையும் கவனித்துக்கொள்ளமுடியும். பல சமயம் நாள் முழுவதும் வேலைசெய்ய வேண்டி இருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயே அலுவலகம் இருப்பது நிம்மதியைத் தரும்" என்கிறார் கண்ணகி.
தங்கள் வேலையின் தன்மை குறித்துக் குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும் என்கிறார் கண்ணகி.
"வாடிக்கையாளர் சந்திப்பு, விற்பனையாளர்களின் விசாரணைகள், காலதாமதம் ஆகியவற்றை வீட்டில் இருக்கிறவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். தொழில் தொடர்பான பின்னணித் தகவல்கள், அடிப்படைப் பிரச்சினைகளை ஓரளவுக்குக் கணவருக்கோ சக குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்துவது நல்லது. அதற்குப் பிறகும் சொந்தப் பந்தங்களிடையே பிரச்சினைகள் எழுந்தால் அவற்றைப் புறந்தள்ளி, கண்ணியத்துடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்" என்று சுயதொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய சில அணுகுமுறைகளை முன்வைக்கிறார் கண்ணகி. எதிலும் தூய்மையான சிந்தனைகளோடு சுய மரியாதையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறார் கண்ணகி. அவர் வார்த்தைகளை நிரூபிக்கிறார்கள் மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்கள்.